குறள் (Kural) - 154

குறள் (Kural) 154
குறள் #154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.

பொருள்
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

Tamil Transliteration
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai
Potri Yozhukap Patum.

மு.வரதராசனார்

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

சாலமன் பாப்பையா

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

கலைஞர்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

பரிமேலழகர்

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும். பொறையுடைமை யின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு . படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம்.

மணக்குடவர்

தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.

புலியூர்க் கேசிகன்

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)