குறள் (Kural) - 153

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
பொருள்
 வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
Tamil Transliteration
 Inmaiyul Inmai  Virundhoraal  Vanmaiyul
Vanmai  Matavaarp  Porai.
மு.வரதராசனார்
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
கலைஞர்
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
பரிமேலழகர்
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல். இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.
மணக்குடவர்
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
புலியூர்க் கேசிகன்
வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்
| பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) | 
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) | 
| அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை (Poraiyutaimai) |