குறள் (Kural) - 152
![குறள் (Kural) 152](https://kural.page/storage/images/thirukural-152-og.jpg)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பொருள்
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
Tamil Transliteration
Poruththal Irappinai Endrum Adhanai
Maraththal Adhaninum Nandru.
மு.வரதராசனார்
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
கலைஞர்
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
பரிமேலழகர்
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)
ஞா.தேவநேயப் பாவாணர்
இறப்பினை என்றும் பொறுத்தல் - பொறை நன்றாதலால் , பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க; அதனை மறத்தல் அதனினும் நன்று - இனி , அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம். பழிக்குப் பழி வாங்கக்கூடிய அல்லது தீங்கு செய்தாரைத் தண்டிக்கக் கூடிய காலத்துப் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறையாதலின், அக்காலமும் அடங்க 'என்றும்' என்றார். இறப்பு சொல்லிலும் செயலிலும் நெறி கடந்த நடத்தை. அதைப் பொறுத்த காலத்தும் அது உள்ளத்திலிருத்தலால் , மறத்தல் அதனினும் நன்றென்றார். மறத்தலாவது தீங்கு செய்தாரை நட்பாகக் கருதுதலும் அவருக்கு நன்மை செய்தலும். 'பொறுத்தல்' வியங்கோள் வினை.
மணக்குடவர்
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
புலியூர்க் கேசிகன்
அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை (Poraiyutaimai) |