குறள் (Kural) - 151

குறள் (Kural) 151
குறள் #151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

Tamil Transliteration
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai.

மு.வரதராசனார்

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

கலைஞர்

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

பரிமேலழகர்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)

ஞா.தேவநேயப் பாவாணர்

அகழ்வாரைத் தாங்கு நிலம்போல - தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல;தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம். இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.

மணக்குடவர்

தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

புலியூர்க் கேசிகன்

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)