குறள் (Kural) - 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
பொருள்
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
Tamil Transliteration
Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal
Penmai Nayavaamai Nandru.
மு.வரதராசனார்
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
சாலமன் பாப்பையா
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
கலைஞர்
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
பரிமேலழகர்
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் ; பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறனாட்சிக் குட்பட்டவளின் பெண்டன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம். இக்குணம் அவன் குற்றங்களை ஓரளவு மறைக்கும் என்பது கருத்து.
மணக்குடவர்
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
புலியூர்க் கேசிகன்
அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) |