குறள் (Kural) - 149

குறள் (Kural) 149
குறள் #149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பொருள்
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

Tamil Transliteration
Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin
Pirarkkuriyaal Tholdhoyaa Thaar.

மு.வரதராசனார்

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா

அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

கலைஞர்

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

பரிமேலழகர்

நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நாமநீர் வைப்பின் - அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; நலக்கு உரியர் யார் எனின் - எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார். நாமம் அச்சம் இஃது உரிச்சொல். அகலம் , ஆழம் , தீயவுயிர்கள், கொந்தளிப்பு , நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். 'நலத்திற்கு' என்பது அத்துச் சாரியை தொக்கு நின்றது. 'தோள் தோய்தல்' இடக்கரடக்கல்.

மணக்குடவர்

நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

புலியூர்க் கேசிகன்

அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே ‘நன்மைக்கு உரியவர் யார்?’ என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)