குறள் (Kural) - 148

குறள் (Kural) 148
குறள் #148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

Tamil Transliteration
Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku
Aranondro Aandra Vozhukku.

மு.வரதராசனார்

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.

கலைஞர்

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

பரிமேலழகர்

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம். (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சான்றோர்க்கு - அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன்மனை நோக்காத பேராண்மை அறன் ஒன்றோ - பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ ; ஆன்ற ஒழுக்கு - நிரம்பிய ஒழுக்கமுமாம். புறப் பகைகளை வெல்வதினும் அகப் பகைகளை வெல்வதே அருமையாதலின் , அறுவகை உட்பகைகளுள் ஒன்றாகிய காமத்தை அடக்குவதைப் பேராண்மை என்றார். ஒன்றோ என்பது ஒன்று தானோ என்று பொருள்படுவதாம். பிறன்மனை நோக்காமை பிறர்க்குச் சிறந்த அறமாயினும் சான்றோக்கு இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து. எச்சவும்மை தொக்கது.

மணக்குடவர்

பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம். இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.

புலியூர்க் கேசிகன்

பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)