குறள் (Kural) - 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
பொருள்
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
Tamil Transliteration
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan.
மு.வரதராசனார்
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
சாலமன் பாப்பையா
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
கலைஞர்
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
பரிமேலழகர்
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான். ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாதவனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.
மணக்குடவர்
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
புலியூர்க் கேசிகன்
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) |