குறள் (Kural) - 146

குறள் (Kural) 146
குறள் #146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

Tamil Transliteration
Pakaipaavam Achcham Pazhiyena Naankum
Ikavaavaam Illirappaan Kan.

மு.வரதராசனார்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

கலைஞர்

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

பரிமேலழகர்

இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இல் இறப்பான் கண் - பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை , பாவம் , அச்சம் , பழி என நான்கும் இகவாவாம் - பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். (82) புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ வுட்கான் பிறனில் புகல் (83) காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் -நீணிரயத் துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட இன்ப மெனக்கெனைத்தாற் கூறு. (84) இவை நாலடியார்.

மணக்குடவர்

பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

புலியூர்க் கேசிகன்

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)