குறள் (Kural) - 145

குறள் (Kural) 145
குறள் #145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பொருள்
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

Tamil Transliteration
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi.

மு.வரதராசனார்

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

கலைஞர்

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

பரிமேலழகர்

எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எளிது என இல் இறப்பான் - பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்தொழுகுபவன் ; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன்குடிப்பழியையும் அடைவான். 'இல்லிறப்பான்' என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது.

மணக்குடவர்

தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.

புலியூர்க் கேசிகன்

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)