குறள் (Kural) - 144

குறள் (Kural) 144
குறள் #144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பொருள்
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

Tamil Transliteration
Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum
Theraan Piranil Pukal.

மு.வரதராசனார்

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.

கலைஞர்

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

பரிமேலழகர்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எனைத்துணையர் ஆயினும் - எத்துணை உயர்ந்தோராயினும் ; தினைத்துணையும் தேரான் பிறன் இல்புகல் - தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்; என் ஆம் - என்ன பயனுடைத்தாம்? உயர்ந்தோர் அரசனும் தலைமையமைச்சனும் படைத்தலைவனும் போலப் பதவியிற் சிறந்தார். தேரான் என்பது தேர்வான் என்னும் உடன்பாட்டு எதிர்கால வினையெச்சத்தின் எதிர்மறை. எத்துணை உயர்ந்தோனாயினும் குற்றங் குற்றமே யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

மணக்குடவர்

எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ? பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.

புலியூர்க் கேசிகன்

தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)