குறள் (Kural) - 143

குறள் (Kural) 143
குறள் #143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

பொருள்
நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

Tamil Transliteration
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar.

மு.வரதராசனார்

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

சாலமன் பாப்பையா

தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.

கலைஞர்

நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

பரிமேலழகர்

தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற - உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர் . உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல்.

மணக்குடவர்

தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

புலியூர்க் கேசிகன்

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)