குறள் (Kural) - 142

குறள் (Kural) 142
குறள் #142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

Tamil Transliteration
Arankatai Nindraarul Ellaam Pirankatai
Nindraarin Pedhaiyaar Il.

மு.வரதராசனார்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.

கலைஞர்

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

பரிமேலழகர்

'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை . அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதென்னுங் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது . காமத்தாற் பெண்ணிற்கடிமை யாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல , அறமும் பொருளும் இழத்தலேயன்றி , அச்சத்தால் தாம் விரும்பிய இன்பமும் இழத்தலால் , பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையாரில்லை என்றார் . கடை என்னும் சொல்லொப்புமை பற்றித் தீவினையில் நிலைத்தவரையும் ' நின்றார் ' என்றார் . பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

மணக்குடவர்

காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

புலியூர்க் கேசிகன்

நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)