குறள் (Kural) - 141

குறள் (Kural) 141
குறள் #141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

Tamil Transliteration
Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu
Aramporul Kantaarkan Il.

மு.வரதராசனார்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

கலைஞர்

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

பரிமேலழகர்

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் - நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை . பிறன் மனைவியைக் காதலிப்பவர் , இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதிபயப்பனவுமான அறம் பொருளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு , ' அறம் பொருள் கண்டார்கணில் ' என்றார். பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும் , அறநூலை யறிதாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை யென்பதும் , தெரியாதுபோயின . அறம் பொருள் என்பன கருமிய ( காரிய) வாகுபெயர் . எண்ணும்மை தொக்கது . பூமி என்னும் வடசொல் வழங்கவே , ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது . பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை .

மணக்குடவர்

பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

புலியூர்க் கேசிகன்

பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)