குறள் (Kural) - 140

குறள் (Kural) 140
குறள் #140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பொருள்
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

Tamil Transliteration
Ulakaththotu Otta Ozhukal Palakatrum
Kallaar Arivilaa Thaar.

மு.வரதராசனார்

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

கலைஞர்

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

பரிமேலழகர்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார் ; பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே . உலகம் என்றது வரையறைப்பட்ட இடவாகுபெயர் . அறநூல்களில் எல்லா வொழுக்க முறைகளும் சொல்லப்படாமையானும் , காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும் , ஒழுக்க வகையில் உயர்ந்தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாததாயிற்று . கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாதலின் , உயர்ந்தோரொடு பொருந்த வொழுகலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவரேயாவர் . ஒழுகுதலைக்கற்றலாவது பின்பற்றி யொழுகுதல் .

மணக்குடவர்

அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

உலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)