குறள் (Kural) - 139

குறள் (Kural) 139
குறள் #139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

Tamil Transliteration
Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya
Vazhukkiyum Vaayaar Solal.

மு.வரதராசனார்

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

கலைஞர்

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

பரிமேலழகர்

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா . வழுக்குதல் கால்தவறுதல்போல் வாய்தவறுதல் ; அதாவது மறத்தல் . ' வாயால் ' என்று வேண்டாது கூறியது , ' செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் ' என்பதிற்போல ( கூக ) நல்ல சொற்களே ' பயின்ற தன்மையை உணர்த்தற்கு . ஏகாரம் தேற்றம் . ' சொலல் ' பால்பகாவஃறிணைப் பெயர் .

மணக்குடவர்

தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

புலியூர்க் கேசிகன்

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)