குறள் (Kural) - 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
பொருள்
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
Tamil Transliteration
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam
Endrum Itumpai Tharum.
மு.வரதராசனார்
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
கலைஞர்
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
பரிமேலழகர்
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் . மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .
மணக்குடவர்
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும். தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
புலியூர்க் கேசிகன்
நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai) |