குறள் (Kural) - 137

குறள் (Kural) 137
குறள் #137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

பொருள்
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

Tamil Transliteration
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi.

மு.வரதராசனார்

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

கலைஞர்

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

பரிமேலழகர்

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - அவ்வொழுக் கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர் . ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின் , அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின் , ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார் .

மணக்குடவர்

ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

புலியூர்க் கேசிகன்

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)