குறள் (Kural) - 136

குறள் (Kural) 136
குறள் #136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

Tamil Transliteration
Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin
Edham Patupaak Karindhu.

மு.வரதராசனார்

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா

ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

கலைஞர்

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

பரிமேலழகர்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - ஒழுக்கக் கேட்டால் தமக்கும் குலவிழிபாகிய கேடுண்டாவதை யறிந்து , உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் - அறிவுரையோர் ஒழுக்கத்தில் தளரார் . 'பாக்கு' ஒரு தொழிற்பெயரீறு.

மணக்குடவர்

ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

புலியூர்க் கேசிகன்

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)