குறள் (Kural) - 135

குறள் (Kural) 135
குறள் #135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

Tamil Transliteration
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai
Ozhukka Milaankan Uyarvu.

மு.வரதராசனார்

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

கலைஞர்

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

பரிமேலழகர்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை - ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு இல்லை . உயர்வு உயர்குலத்தானாதல் .

மணக்குடவர்

மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

புலியூர்க் கேசிகன்

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)