குறள் (Kural) - 134

குறள் (Kural) 134
குறள் #134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பொருள்
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

Tamil Transliteration
Marappinum Oththuk Kolalaakum Paarppaan
Pirappozhukkang Kundrak Ketum.

மு.வரதராசனார்

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

கலைஞர்

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

பரிமேலழகர்

ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும் ; பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு , தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும் . ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் . பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்க வில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று ; அவன் தமிழ வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம் . ஆகவே , அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும் , அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் , தமிழறநூல் முடிபாம் .

மணக்குடவர்

பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai)