குறள் (Kural) - 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பொருள்
 ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
Tamil Transliteration
 Ozhukkam Utaimai  Kutimai  Izhukkam
Izhindha  Pirappaai  Vitum.
மு.வரதராசனார்
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சாலமன் பாப்பையா
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
கலைஞர்
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
பரிமேலழகர்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒழுக்கமுடைமை குடிமை - நல்லொழுக்க முடைமையே உயர்குலத் தன்மையாம் ; இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - தீயொழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும் . குடி என்னும் சொல் தலைக்கட்டு , குடும்பம் , சரவடி (கோத்திரம் ) , குலம் , குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும் . இங்குக் குடியென்றது நிலத்தை . குலமாவது ஒரே தொழில் செய்யும் மக்கள் வகுப்பு . வரணம் என்பது ஆரியர் வந்தபின் நிறம்பற்றியும் பிறப்புப்பற்றியும் ஏற்படுத்தப்பட்ட ஆரிய வகுப்புப் பிரிவினையாதலால் , அது " யாதும் ஊரே யாவருங் கேளிர் " , " குலமும் ஒன்றே குடியும் ஒன்றே " , "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் " என்னும் தமிழ்க் கொள்கைக்கும் , அதைத் தழுவிய வள்ளுவர் கருத்திற்கும் ஏற்காது . ஆகவே , தமிழ வொழுக்கங்கெடின் பிராமணனுந் தாழ்ந்தவனாவான் என்பதே வள்ளுவர் கருத்தாம் .
மணக்குடவர்
ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்
| பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) | 
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) | 
| அதிகாரம் (Adhigaram) | ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai) |