குறள் (Kural) - 1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
பொருள்
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
Tamil Transliteration
Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam
Kooti Muyangap Perin.
மு.வரதராசனார்
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
சாலமன் பாப்பையா
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
கலைஞர்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.
பரிமேலழகர்
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காம நுகர்ச்சிக்கின்பமாவது, நுகர்வதற்குரிய காதலன் காதலியாகிய இருவருட் காதலி காதலன்பாற் குற்ற முள்ள விடத்தும் இல்லா விடத்தும் அவனொடு ஊடுதல் ; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற் கின்பமாவது அதனை அள வறிந்து நீக்கிக் காதலன் காதலியிருவரும் தம்முட் கூடித் தழுவப் பெறின் அத்தழுவல். கூடுதல் கருத்தொத்தல். தழுவுதல் இங்குப் புணர்தல். துனிநிலையில் துன்பம் பயத்தலானும், ஊடல் நிலையில் இன்பம் பயவாமையானும், இரண்டிற்கும் இடைப்பட்ட புலவி நிலையை நீள விடாது அளவறிந்து நீக்கிக் கூடி , அளவில்லாத இன்பம் பெறுதல் அரி தென்பது பற்றிக் 'கூடி முயங்கப் பெறின்' என்றான். அவ்வீரின்பமும் யான் பெற்றே னென்பதாம். ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவி யென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை படர் மெலிந்திரங்கன் முதல் நிறையழித லீறாயவற்றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற்றுள்ளுங் கண்டு கொள்க. அஃதேல், வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றா ராலெனின் , அஃது அறம் பொருளின்ப மென்னும் பயன்களுள் ஒன்று பற்றிய பிரிவின்மையானும், முனிவராணையான் ஒருகாலத்தோர் குற்றத் துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும் ஈண்டொழிக்கப் பட்டதென்க.' என்று பரிமேலழகர் தம் உரை முகத்துப் போன்றே அதன் புறத்திலும் ஆரிய நஞ்சைக் கொட்டி வைத்துள்ளார். இன்பத்துப் பாலின் இரண்டாம் இயல் கற்பியல் என்பதே யன்றிப் பிரிவியல் என்பதன்று. மேலும், திருவள்ளுவர் வடநூலைப் பின்பற்ற வில்லை யென்பதை,அவர் வடநூலார் கூறும் சாபப் பிரிவினையைக் கூறவில்லை யென்று பரிமேலழகரே தன் முரணாகக் கூறியிருப்பதினின்று தெளிந்து கொள்க.
மணக்குடவர்
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
புலியூர்க் கேசிகன்
ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊடலுவகை (Ootaluvakai) |