குறள் (Kural) - 1329

குறள் (Kural) 1329
குறள் #1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

பொருள்
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

Tamil Transliteration
Ootuka Manno Oliyizhai Yaamirappa
Neetuka Manno Iraa.

மு.வரதராசனார்

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

சாலமன் பாப்பையா

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

கலைஞர்

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒளியிழை மன் ஊடுக - ஒளி வீசும் அணிகலங்களையுடையாள் இன்னும் எம்மொடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக- அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக. 'ஊடுக' , 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப்பொருளது ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின்னர்ப் பேரின்பம் பெறக் கூடுதல் உறுதியாதலின், அவ்விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றேயென்பதாம்.

மணக்குடவர்

விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

புலியூர்க் கேசிகன்

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)ஊடலுவகை (Ootaluvakai)