குறள் (Kural) - 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பொருள்
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
Tamil Transliteration
Parindhompik Kaakka Ozhukkam Therindhompith
Therinum Aqdhe Thunai.
மு.வரதராசனார்
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
சாலமன் பாப்பையா
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.
கலைஞர்
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
பரிமேலழகர்
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் பரிந்து ஓம்பிக்காக்க - ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாவாறு வருந்தியும் பேணிக்காக்க ; தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை - பலவகை யறங்களையுமாராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணையாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும் , அவ்வொழுக்கமே துணையாக முடியும் . ஏகாரம் பிரிநிலை.
மணக்குடவர்
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai) |