குறள் (Kural) - 1322

குறள் (Kural) 1322
குறள் #1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

பொருள்
காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.

Tamil Transliteration
Ootalin Thondrum Sirudhuni Nallali
Vaatinum Paatu Perum.

மு.வரதராசனார்

காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.

சாலமன் பாப்பையா

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

கலைஞர்

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

பரிமேலழகர்

(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, இப்புலவியால் வருத்துவ தென்னையென்ற தோழிக்கு அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் கரணகமாக என்கண் தோன்றும் சிறு சடைவினால், நல் அளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி சற்று வாடுமாயினும் பின்பு பெருமை பெறும். தவறில்லாவிடத்து நிகழ்கின்ற வூடல் விரைந்து நீங்குதலின் ' சிறுதுனி ' யென்றும், ஆராமை பற்றி நிகழ்தலின் நல்லளி மாபெரும்பாலும் வாடாதென்பாள் ' வாடினும் ' என்றும், ஒருகால் சற்று வாடினும் அதனாற் பேரின்பம் விளையுமென்பாள் 'பாடுபெறும்' என்றும், கூறினாள். சிறுதுனியாற் பெரும்பயன் விளைதலின் அது வருத்தமெனப்படாதென்பதாம். தலையளி யென்பது பேரின்பக் கலவிக் கூட்டம். எதிர்மறையும்மை அருமைப் பொருளது.

மணக்குடவர்

ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.

புலியூர்க் கேசிகன்

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)ஊடலுவகை (Ootaluvakai)