குறள் (Kural) - 1321

குறள் (Kural) 1321
குறள் #1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது
அவர்அளிக்கு மாறு.

பொருள்
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.

Tamil Transliteration
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru.

மு.வரதராசனார்

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

கலைஞர்

எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.

பரிமேலழகர்

அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகள் கரணகமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை யென்றாட்கு அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - காதலர் பால் தவறில்லையாயினும்; அவர் அளிக்கும் ஆறு ஊடுதல் வல்லது - அவர் நம்மோடு செய்யும் பேரின்பக் கூட்டம் இங்ஙனம் அவரோடூடுதலை விளைக்கும் வலிமையுள்ளதாக விருக்கின்றது. எல்லையில்லாத இன்பந்தருபவராயிருத்தலின், யான் பெறும் இப்பேரின்பம் பிற மகளிரும் பெறுவரெனக் கருதி, அது பொறாமையால் இவ்வூடல் நிகழ்கின்ற தென்பதாம். ' அவர்க்கு ' வேற்றுமை மயக்கம்; நாலாவது ஏழாவதில் மயங்கிற்று. உம்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.

மணக்குடவர்

அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

புலியூர்க் கேசிகன்

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)ஊடலுவகை (Ootaluvakai)