குறள் (Kural) - 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
Tamil Transliteration
Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam
Uyirinum Ompap Patum.
மு.வரதராசனார்
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
கலைஞர்
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
பரிமேலழகர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால் ; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் . உயிர் எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாயினும் , அவ்வுயிருக்கே சிறப்பைத் தருதலால் ' உயிரினு மோம்பப்படும் ' என்றார்.
மணக்குடவர்
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.
புலியூர்க் கேசிகன்
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai) |