குறள் (Kural) - 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
பொருள்
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்.
Tamil Transliteration
Thannai Unarththinum Kaayum Pirarkkumneer
Inneerar Aakudhir Endru.
மு.வரதராசனார்
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
கலைஞர்
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தன்னை உணர்த்தினும் - இவ்வகையிற் கரணகமின்றி யூடிய தன்னை யான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்குங்காலும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் - பிறமகளிர்க்கும் நீர் அவரூடியவிடத்து இவ்வாறே பணிந்துணர்த்துந் தன்மையையுடையீராகுதிர் என்று சினங்கொள்வாள். இவள் நான் தெளிவித்த விடத்துந் தெளியாமை பற்றி, வேறு வழியில்லாது, என்மேல் இட்டேற்றிய பொய்யான தவற்றையும் உடம்பட்டுப் பணிந்தேன். ஆனால், நான் எதிர்பாராவண்ணம் அதுவும் புலத்தற் கேதுவாய் முடிந்தது. இனி இவள்பாற் செய்யத் தக்க தென்னவென்று தெரியாது மயங்கித் தியங்குகின்றேன் என்பதாம்.
மணக்குடவர்
தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
புலியூர்க் கேசிகன்
அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) |