குறள் (Kural) - 1318

குறள் (Kural) 1318
குறள் #1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

பொருள்
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்.

Tamil Transliteration
Thummuch Cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endru.

மு.வரதராசனார்

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

சாலமன் பாப்பையா

அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

கலைஞர்

ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியபோது, என்காதலி யாருள்ளித் தும்மினீரென்று புலத்தலஞ்சி, அதனையடக்க, நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நும் காதலியார் நும்மை நினைத்தலை எனக்கு மறைக்கின்றீரோ என்று சொல்லி யழுதாள். தும்மினுங் குற்றம், தும்மலை யடக்கினுங் குற்றமாயின் என் செய்வது என்பதாம். ' தும்மு ' முதனிலைத் தொழிற்பெயர். பரத்தையரை 'நுமர் ' என்றதினால், 'எம்மை ' யென்பது நும்மோடியைபில்லாத எம்மை யென்பதுபட நின்றது.

மணக்குடவர்

தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

புலியூர்க் கேசிகன்

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)