குறள் (Kural) - 1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
பொருள்
``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்.
Tamil Transliteration
Ullinen Endrenmar Renmarandheer Endrennaip
Pullaal Pulaththak Kanal.
மு.வரதராசனார்
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
சாலமன் பாப்பையா
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.
கலைஞர்
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உள்ளினேன் என்றேன் - பிரிந்து போயிருந்த காலத்தில் உன்னை ஒருபோதும் மறவாது நினைத்திருந்தேன் என்னுங் கருத்தில், உள்ளினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - உடனே அதை ஒருகால் மறந்திருந்து பின்பு நினைத்துக்கொண்டேன் என்று நான் கூறியதாகக் கருதி, என்னையிடையேமறந்துவிட்டீரென்று சொல்லி, அதற்கு முன்பு என்னைத் தழுவுதற்கிருந்தவள் அதைச் செய்யாது அன்றே புலவியை மேற்கொண்டுவிட்டாள். எதிர்நிலை யளவை வகையால் உள்ளுதலுக்கு மறுதலையான மறத்தலையும் உட்கொண்டு புலந்தாள் என்பதாம். ' மற்று ' வினைமாற்றின்கண் வந்தது.
மணக்குடவர்
அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.
புலியூர்க் கேசிகன்
‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) |