குறள் (Kural) - 1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
பொருள்
``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
Tamil Transliteration
Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal.
மு.வரதராசனார்
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
சாலமன் பாப்பையா
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
கலைஞர்
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
பரிமேலழகர்
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால். இப்பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம் என்று கூறினேனாக; கண் நிறை நீர் கொண்டனன் - அதனால் மறுபிறப்பில் நான் பிரிந்துபோவேனென்று குறித்ததாகக் கருதித் தன் கண்நிறையக் கண்ணீரைப் பெருக்கிவிட்டாள். நான் சொன்ன வெளிப்படைச் சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டதல்லது என்பால் தவறில்லை யென்பதாம்.
மணக்குடவர்
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
புலியூர்க் கேசிகன்
‘இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்’ என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) |