குறள் (Kural) - 1312

குறள் (Kural) 1312
குறள் #1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

பொருள்
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து.

Tamil Transliteration
Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai
Neetuvaazh Kenpaak Karindhu.

மு.வரதராசனார்

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).

கலைஞர்

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.

பரிமேலழகர்

(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு. இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.

மணக்குடவர்

தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

புலியூர்க் கேசிகன்

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)