குறள் (Kural) - 130

குறள் (Kural) 130
குறள் #130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

பொருள்
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

Tamil Transliteration
Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi
Arampaarkkum Aatrin Nuzhaindhu.

மு.வரதராசனார்

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

சாலமன் பாப்பையா

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

கலைஞர்

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

பரிமேலழகர்

கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கற்றுக் கதம் காத்து அடங்கல் ஆற்றுவான் செவ்வி - அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யொழுக வல்லவனின் செவ்விய மனநிலையை ; அறம் ஆற்றின் நுழைந்து பார்க்கும் - அறத்தெய்வம் அவனைத் தலைக்கூடுமாறு அவனையடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும் . செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை . செவ்வையான நிலை செவ்வி . அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது , அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. " நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை " (தொல் . 857)

மணக்குடவர்

வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அடக்கம் உடைமை (Atakkamutaimai)