குறள் (Kural) - 1279

குறள் (Kural) 1279
குறள் #1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பொருள்
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

Tamil Transliteration
Thotinokki Mendholum Nokki Atinokki
Aqdhaan Tavalsey Thadhu.

மு.வரதராசனார்

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா

நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

கலைஞர்

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

பரிமேலழகர்

(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.

புலியூர்க் கேசிகன்

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)