குறள் (Kural) - 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
பொருள்
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
Tamil Transliteration
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu.
மு.வரதராசனார்
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
சாலமன் பாப்பையா
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
கலைஞர்
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
பரிமேலழகர்
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) |