குறள் (Kural) - 1273

குறள் (Kural) 1273
குறள் #1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

பொருள்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

Tamil Transliteration
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu.

மு.வரதராசனார்

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

கலைஞர்

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)