குறள் (Kural) - 1271

குறள் (Kural) 1271
குறள் #1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

பொருள்
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

Tamil Transliteration
Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu.

மு.வரதராசனார்

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா

நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

கலைஞர்

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

பரிமேலழகர்

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)

புலியூர்க் கேசிகன்

நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)