குறள் (Kural) - 125

குறள் (Kural) 125
குறள் #125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

Tamil Transliteration
Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu.

மு.வரதராசனார்

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

கலைஞர்

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

பரிமேலழகர்

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - செருக்கின்றியடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து - ஆயினும், அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும். எல்லாராலும் மதிக்கப்படும் இயல்பும், எண்ணியதைச் செய்து முடிக்குந் திறனும், ஒட்டோலக்கமாக (ஆடம்பரமாக) வாழ்ந்தின்புறும் உயர்வும், இடம்பொருளேவலால் வரம்பிறந் தொழுகத் தூண்டும் நிலைமையும், உடைய செல்வரின் வாழ்க்கை அடக்கமுடைமைக்குப் பெரிதும் ஏற்காததாயிருப்பதால், அவரிடத்து அவ்வறம் அமைவது அவர்க்கு மற்றொரு செல்வப்பேறாம் என்றார். செல்வந் தகைத்து என்பது இன்னோசை பற்றி மெலிந்து நின்றது.

மணக்குடவர்

அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடை யார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் - மிகுதி.

புலியூர்க் கேசிகன்

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அடக்கம் உடைமை (Atakkamutaimai)