குறள் (Kural) - 126

குறள் (Kural) 126
குறள் #126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

பொருள்
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

Tamil Transliteration
Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin
Ezhumaiyum Emaap Putaiththu.

மு.வரதராசனார்

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

சாலமன் பாப்பையா

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

கலைஞர்

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

பரிமேலழகர்

ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆமைபோல் - ஆமையானது, தனக்குத் தீங்கு நேராவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலுமாகிய ஐந்துறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல; ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது. ஒருமை, ஐந்து, எழுமை என்பன தொகைக் குறிப்பு. இவற்றுள் ஒருமை எழுமை என்பன எண்ணாயிருக்கும் நிலைமை குறியாது எண்ணையே குறித்து நின்றன. எழுபிறப்புஎன்பதற்கு 62 ஆம் குறளுரையில் தந்த விளக்கத்தையே இங்குங் கொள்க.

மணக்குடவர்

ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

புலியூர்க் கேசிகன்

ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அடக்கம் உடைமை (Atakkamutaimai)