குறள் (Kural) - 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
பொருள்
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
Tamil Transliteration
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu.
மு.வரதராசனார்
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
கலைஞர்
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
பரிமேலழகர்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி; மலையினும் மாணப் பெரிது - மலையுயர்ச்சியினும் மிகப் பெரிது. மலை யென்பது வளமிகுந்ததாதலின், குட மலையும் பனி (இமய) மலையும் போல்வதாகும். உம்மை உயர்வு சிறப்பு. ' நிலையிற்றிரியா தடங்குதல்' ஐம்புலவின்பமும் நுகர்ந்து கொண்டே அடங்கியொழுகுதல்.
மணக்குடவர்
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
புலியூர்க் கேசிகன்
தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அடக்கம் உடைமை (Atakkamutaimai) |