குறள் (Kural) - 123

குறள் (Kural) 123
குறள் #123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

Tamil Transliteration
Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin.

மு.வரதராசனார்

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

கலைஞர்

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

பரிமேலழகர்

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - ஒருவன் அறியத் தக்க நூல்களை யறிந்து இல்லறத்தின்கண் அடங்கி யொழுகுவானாயின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த நன்மையை விளைவிக்கும். ஆற்றின் அடங்குதலாவது, பிறன் பொருளைக் கவராமையும் பிறன் மனைவியை விழையாமையும் பிறனைத் தனக்கு அடிப்படுத்தாமையுமாம்.

மணக்குடவர்

அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும். அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.

புலியூர்க் கேசிகன்

அறிய வேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அடக்கம் உடைமை (Atakkamutaimai)