குறள் (Kural) - 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
பொருள்
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
Tamil Transliteration
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol.
மு.வரதராசனார்
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
கலைஞர்
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
பரிமேலழகர்
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) |