குறள் (Kural) - 1231

குறள் (Kural) 1231
குறள் #1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பொருள்
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

Tamil Transliteration
Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli
Narumalar Naanina Kan.

மு.வரதராசனார்

இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா

பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

கலைஞர்

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

பரிமேலழகர்

(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal)