குறள் (Kural) - 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
பொருள்
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.
Tamil Transliteration
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum.
மு.வரதராசனார்
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.
சாலமன் பாப்பையா
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.
கலைஞர்
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.
பரிமேலழகர்
(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.)
புலியூர்க் கேசிகன்
அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal) |