குறள் (Kural) - 1206

குறள் (Kural) 1206
குறள் #1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

பொருள்
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.

Tamil Transliteration
Matriyaan Ennulen Manno Avaroti Yaan
Utranaal Ulla Ulen.

மு.வரதராசனார்

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.

சாலமன் பாப்பையா

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.

கலைஞர்

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.

பரிமேலழகர்

(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal)