குறள் (Kural) - 1196

குறள் (Kural) 1196
குறள் #1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

Tamil Transliteration
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu.

மு.வரதராசனார்

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

கலைஞர்

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘காதல் ஒருதலையானது’ என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi)