குறள் (Kural) - 1193

குறள் (Kural) 1193
குறள் #1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

Tamil Transliteration
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku.

மு.வரதராசனார்

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

சாலமன் பாப்பையா

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

கலைஞர்

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

காதலரால் விரும்பப்படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், ‘மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்’ என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi)