குறள் (Kural) - 1185

குறள் (Kural) 1185
குறள் #1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

பொருள்
என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

Tamil Transliteration
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu.

மு.வரதராசனார்

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.

கலைஞர்

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

பரிமேலழகர்

(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral)