குறள் (Kural) - 1184

குறள் (Kural) 1184
குறள் #1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

பொருள்
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.

Tamil Transliteration
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu.

மு.வரதராசனார்

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

சாலமன் பாப்பையா

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

கலைஞர்

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.

பரிமேலழகர்

('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)

புலியூர்க் கேசிகன்

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral)